6 பாடல்கள் , 3 சண்டைகாட்சிகள் , 2 கதாநாயகிகள் , ஒரு கோரமான வில்லன் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்
இது ஒரு வைல்ட்லைப் போடோகிராபர் ஆக துடிக்கும் ஒரு இளைஞனை (கார்த்திக்காக தனுஷ் ) சுற்றி நடக்கும் கதை. அவனால் அவனது நண்பர்களுக்கும் அவன் நண்பர்களால் அவனுக்கும் என்ன என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது தான் கதை. படத்தில் நண்பர்கள் மிகவும் பரஸ்பரதோடு இருக்கிறார்கள்.
படத்தின் கதையை நான் இதற்க்கு மேல் இங்கு விவாதிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் . . ஏனென்றால் இது பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்.
படத்தின் நுணுக்கங்களை பார்க்கலாம் -
ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருது பெற்றாரானால் இந்த படத்திற்கு அவருக்கு விருது கிடைப்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவருக்கு வசனங்களே கிடையாது என்று சொல்லலாம், அனைத்தும் அவரது சைகையில் வெளிப்படுத்தி இருக்கிறார், வாய்ப்பு கேட்டும் , நியாயம் கேட்டும் தன் ஆஸ்தான வைல்ட்லைப் போடோகிராபரிடம் கெஞ்சும் பொழுது, இதுவரை நாம் பார்த்திராத தனுஷ் நடிப்பில் நம்மை கார்த்திக் என்னும் தன்னுடைய காரேக்டருக்காக வருத்தப்பட வைக்கிறார். . என்று ஒரு நடிகர், கதையுடன் ஒன்றி நம்மை அந்த கதாபாத்திரத்தோடு இணைக்கிராரோ, அன்று தான் அவர் வெற்றிப்பெற்றதாக கருத முடியும், தனுஷ் தான் ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் தன்னை ஒரு நவரச நாயகனாக மாற்றிக்கொள்ளும் பாதையில் செல்கிறார்.
ரிச்சா கங்கோபாதையாய் ( யாமினி ) முதல் சில காட்சிகளில், வழக்கம் போல வரும் நடிகை என்று நினைத்தவர்களை , அடுத்து வரும் காட்சிகளில் மிகவும் மெருகேறி படத்தின் முக்கிய கருவாகிறார் . தனுஷை விட இவருக்கு வசனங்கள் குறைவு ஆனால் நடிப்பில் அவருக்கு மிஞ்சி / இணையாக தன் உணர்ச்சிகளை வெளிபடுத்திருக்கிறார். மனோரம்மா, ரேவதி , பானுப்ரியா , ஜோதிகா( சந்திரமுகி , மொழி மட்டும் ) போன்ற சிறந்த நடிகைகளின் வரிசையில் போட்டியின்றி நுழைந்து விட்டார் ரிச்சா.
கதையை மிகவும் எதார்த்தமாக கையாண்டு இருக்கிறார் செல்வராகவன். ஒரு காட்சி கூட இயல் வாழ்கையில் நடக்காது என்று நாம் கூற முடியாது . பாடல்களுக்கு 5 நிமிடங்களுக்கு முன்னும் , பாடல்களுக்கும் மட்டுமே கதாநாயகிகள் என்ற தொன்று தொட்ட வழக்கை உடைத்துள்ளார் செல்வா. அணைத்து காரேக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு நொடி கூட திரையை விட்டு விழி தவறாது நம்மை கட்டி போட்டுள்ளார் செல்வா.
தனுஷ் நண்பரின் அப்பா காரெக்டர் பல இடங்களில் ஏதேனும் பேசுவார் என்று நம்மை எதிர் பார்க்க வைத்திருக்கிறார். நண்பர்கள் நடுவே ஒரு பெரிய வாய்ச்சண்டை நடுக்கும் நேரத்திலும் அப்பா பேசாது அவர்களை சாந்தப்படுத்தும் காட்சி பிரமாதம்.
செல்வா வசனங்களே இல்லாமல் பல காட்சிகளை உருவாக்கி இருக்கிறார், ரிச்சாவிடம் தனுஷ் மன்னிப்பு கோரும் காட்சியில் வசனங்களே இல்லாமல், இருவரும் இதுவரை நாம் பார்த்திராத யதார்த்த நடிப்பால் நம் கண்களில் ஈரத்தை வரவழைகின்றனர். பைத்தியமல்லாது கிறுக்கு பிடித்தவர்கள் பலரை நான் நிஜத்தில் பார்த்திருக்கிறேன், அதை அப்படியே திரையில் காண்பித்து இருக்கிறார் செல்வா. தனுஷும் ஒரு தெளிவற்ற மனிதர் எப்படி இருப்பார் என்பதை தத்ரூபமாக நடித்திருக்கிறார் .
ராம்ஜி தன் கேமரா நுணுக்கங்களால் திரையில் இயற்கை காட்சிகளை வெகு அழகாக காட்டி இருக்கிறார் .போடோக்ராபி சம்மந்தப்பட்ட கதை என்பதால் பல காட்சிகளை ஸ்டில் மூலம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை பார்த்து நம் இளைஞர்கள் பலர் வைல்ட்லைப் போடோகிராபராக உருவாக ஒரு வித்தாக அமையவும் வாய்ப்பிருக்கிறது. லைட்டிங் மிகவும் குறைவாக தெரிந்தாலும் கதைக்கு அது தேவை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இப்படத்தில் இன்னும் ஒரு முக்கியமான பங்கு இசையமைப்பாளர் GV பிரகாஷுடையது . மிகவும் எதார்த்தமான கதை, ஆழமான உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகள் , இப்படிப்பட்ட படத்திற்கு AR ரஹ்மான் , இளையராஜா இசையமைத்தால், சிம்போனி ஆர்கஸ்ட்ரா இல்லாமல் இருந்திருக்காது . அனால் அவை இல்லாமல் கதையோடு இசையை பிணைந்து நம்மை கட்டிப்போட்டுள்ளார். பல காட்சிகளில் பின்னணி இசை எதுவும் இல்லாமல் வெறும் கதாபாத்திரத்தின் அழுகை, சிரிப்பு , மௌனம் மட்டுமே வைத்து நம்மை கட்டிபோட்டுள்ளார். குணா , ஹே ராமில் இளையராஜா உபயோகபடுத்திய மௌனத்தை GV மிக தத்ரூபமாக படைத்திருக்கிறார்.
மொத்தத்தில் வாழ்கை , காதல், திருமணம் , லட்சியம், நண்பர்கள் மற்றும் அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு பின்னப்பட்ட சித்திரம் தான் மயக்கம் என்ன...
மயக்கம் என்ன , நம்மை மயக்க வைக்கும் !!!